
புத்தக அட்டை
காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள் என்றால் நிச்சயமாக டெக்ஸ் வில்லரைத் தெரிந்திருக்காமல் இருக்க முடியாது. டெக்ஸ் குதிரையேறி வேட்டையாடும் காட்சியை லயன், முத்து காமிக்ஸில் படித்து திளைத்த காலம் ஒரு பொற்காலம்.
டெக்சின் கதைகள் 1948ல் முதன் முதலாக வெளியாகத் தொடங்கியிருக்கின்றது. இதே ஆண்டில்தான் இலங்கை சுதந்திரம் அடைந்தது. அதைவிட எனது தாயாரும் தந்தையாரும் பிறந்ததும் இதே ஆண்டுதான். என் வாழ்வில் முக்கியமான ஆண்டாக இருக்கும் 1948ல் டெக்ஸ் பிறந்தமை மேலும் பெருமையே எனக்கு.
காலம் பல கடந்தாலும் டெக்ஸ்சின் காமிக்சுகள் என்றும் இளமையானவையே. இத்தாலியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த கௌபாய் நாயகனின் கதையொன்றை லக்கி லிமட் ஆதரவில் இணையத்தின் வழி படிக்க முடிந்தமை பெரும் மகிழ்ச்சியான விடையம். Tex – The Lonesome Rider என்கிற இந்தக் கதை நான் கடைசியாகப் படிந்த டெக்சின் கதையாகும்.
வழமையான டெக்சின் சித்திரங்களில் இருந்து மாறி வித்தியாசமான சித்திரப் பாணியில் இந்தக் கதை அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். இதற்கு முக்கியமான காரணம் இந்த காமிக்சின் ஓவியர் ஜோ குபேர்ட். காலப் பகுதியில் எழுதப்பட்ட & வரையப்பட்ட இந்தக் கதை முந்தய டெக்ஸ்வில்லர் ஓவியங்களில் இருந்து வேறுபட்டிருக்கின்றமை வெள்ளிடைமலை. அதைவிட இந்த லோன்சம் ரைடர் கதையில் டெக்சின் வழமையான தோழனான கிட் கார்சன் மற்றும் டைகர் ஜக் போன்றவர்களைக் காண முடியாது. இதனால் இந்தக் கதையில் டெக்ஸ் தனியாளாக சுப்பர் ஸ்டார் போல சண்டை போடுகின்றார்.
எனக்கென்ன்னவோ கதையை வாசிக்கும் போது டெக்சின் ஓவியங்களில் டிசி காமிக்சின் பனிஷர் ஓவியப் பாணியின் தாக்கத்தைப் பார்க்க கூடியதாகவிருந்தது. சில வேளை ஓவியர் தன் பாணியில் வரைய அப்படிச் செய்திருக்கலாம்.

யோ குபேர்ட் - ஓவியர்
சரி கதையில் என்ன நடக்கிறது என்று மேலோட்டமாக சொல்கின்றேன். தனது நண்பர் குடும்பத்தைப் பார்க்க நீண்ட காலத்தின் பின்னர் செல்லும் டெக்சிற்கு அங்கே அதிர்ச்சி காத்திருக்கின்றது.
ஊர் மேய்ந்து கொள்ளையடிக்கும் ஒரு கும்பல் டெக்சின் குடும்ப நண்பர்களின் குடும்பத்தை வேட்டையாடிவிடுகின்றது.
இந்த படுகொலைகளுக்குப் பழி வாங்குவதாக இவர்களின் கல்லறையில் சத்தியம் புரிந்து புறப்படுகின்றார் அகில உலக காமிக்ஸ் சுப்பர் ஸ்டார் டெக்ஸ்.
அப்புறம் என்ன மீதிக் கதையைச் சொல்வது அழகல்லவே. டெக்ஸ் மெல்ல மெல்ல முடிச்சுகளை அவிழ்த்து நரிகளை வேட்டையாடுவதுதான் கதை.
இவ்வளவு சிறப்பான இந்த டெக்ஸ் கூட அமெரிக்காவில் பிரபலமாகாமை ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. சில வேளை சூப்பர் மேனும், பட் மேனும்தான் அவர்கள் உலகம் போல.
நீங்கள் டெக்ஸ் இரசிகரா?? அப்படியானால் கட்டாயம் இந்தக் கதையைப் படித்துவிடுங்கள்.
அமேசனில் வாங்க
New
தமிழில் இந்தக் கதையை லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் “
சாத்தான் வேட்டை” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.
தகவல் உதவி: Siv, King Viswa, Mathu
பட உதவி: கிங் விஷ்வா

முன் அட்டை

பின் அட்டை
காமிக்ஸ் பதிவுகள் தொடர்ந்து எழுதும் ஆசை வந்துவிட்டது. ஆனால் அதற்கு ஒரு தனி வலைப்பதிவு திறக்க நினைத்தாலும் அளவிற்கு மிஞ்சி எதற்கு ஆயிரம் வலைப்பதிவு திறக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தால் இந்த ஹொலிவூட் பார்வை வலைத்தளத்திலேயே காமிக்ஸ் பதிவுகளையும் இடுவதாக முடிவு செய்துள்ளேன். இவ்வாறு செய்வது பிடிக்காதுவிட்டார் அறியத் தாருங்கள் நிச்சயமாக புது வலைப்பதிவு ஆரம்பித்துவிடலாம்.